பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த மின்மாற்றி கொழுந்துவிட்டு எரிந்தது: தற்காலிக மின்சேவை வழங்க திட்டம்

ஆவடி: ஆவடி அருகே பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் நேற்று நள்ளிரவு உயர் அழுத்த மின்மாற்றியில் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. அவற்றை சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இதனால் அதன் கட்டுப்பாட்டு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதிகளில் தற்காலிக மின்சேவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் வெளியே செல்லாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் அனைத்து வீடுகளிலும் ஏசி, மின்விசிறி, பிரிஜ் போன்ற பல்வேறு மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், தற்போது மின்தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக, அந்தந்தப் பகுதிகளில் உள்ள பழைய மின்மாற்றிகள் திடீரென தீப்பிடித்து எரியும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆவடி அருகே பட்டாபிராம், சேக்காடு பகுதியில் 110 கிலோவாட் திறன் கொண்ட துணை மின்நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள ஒரு உயர் அழுத்த மின்மாற்றியில் நேற்று நள்ளிரவு திடீரென குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஆயில் கசிவு ஏற்பட்டதில், அந்த பழைய மின்மாற்றி திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதனால் அங்கு பணியில் இருந்த மின்வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி, பூந்தமல்லி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்பகுதி முழுவதிலும் கரும்புகை சூழ்ந்ததால் வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி, மின்மாற்றியில் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். மின்மாற்றியில் தீ விபத்து காரணமாக பட்டாபிராம், சேக்காடு, தண்டுரை, கக்கன்ஜி நகர், கோபாலபுரம், காமராஜர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தொகுதி எம்எல்ஏ ஆவடி சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பட்டாபிராம் பகுதியில் புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, பட்டாபிராம் பகுதிகளில் தற்காலிகமாக மின்சேவை வழங்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த மின்மாற்றி கொழுந்துவிட்டு எரிந்தது: தற்காலிக மின்சேவை வழங்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: