வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால் பாஜக கூட்டணி 220 தொகுதிகளை தாண்டாது: கர்நாடகா முதல்வர் பேட்டி

பெங்களூரு: வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால் பாஜக கூட்டணி 220 தொகுதிகளை தாண்டாது என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகா முதல்வருமான சித்தராமையா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘பாஜக தலைவர்கள் 400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று பிரசாரம் செய்கின்றனர். ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 220 தொகுதிகளைக் கூட தாண்டாது. பிரதமர் மோடி ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் பாஜக கூட்டணியின் சரிவுக்கு காரணமாகும்.

பிரதமர் தனது 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை அவர் பட்டியலிட வேண்டும். கர்நாடகாவில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். ‘இந்தியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றாலும் கூட, அதனால் பாதகமும் ஏற்படாது. மக்களவை தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் கூட, எனது தலைமையிலான அரசுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. எனது தலைமையிலான அரசு தனது முழு பதவி காலத்திலும் ஆட்சி நடத்தும். பாஜக மற்றும் முன்னாள் பிரதமர் எச்டி தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையேயான கூட்டணியானது சந்தர்ப்பவாத கூட்டணியாகும்.

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 224 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே மதசார்பற்ற ஜனதா தளத்தால் வெற்றி பெறமுடிந்தது. அதனால் தேவகவுடா விரக்தியில் உள்ளார். மதவாதம் உள்ளிட்ட பல விஷயங்களில் பிரதமர் மோடியை அவர் முன்பு விமர்சித்திருந்தார். அவர் அப்போது பேசியதை மக்கள் மறக்க மாட்டார்கள். அப்படி இருந்தும் அவர்களுடன் (பாஜக) ஏன் கூட்டணி வைத்தார் என்பது மக்களுக்கு தெரியும்’ என்றார்.

The post வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால் பாஜக கூட்டணி 220 தொகுதிகளை தாண்டாது: கர்நாடகா முதல்வர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: