93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 3ம் கட்டமாக 93 தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட 11 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளிலும், 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதி கேரளா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து, 3ம் கட்ட தேர்தல் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் நாளை நடக்க உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2,963 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அதில், 1,563 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, இறுதியில், 1,351 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். 3ம் கட்ட தேர்தலில் அசாமில் 4 தொகுதியிலும், பீகாரில் 5, சட்டீஸ்கரில் 7, கோவாவில் 2, குஜராத்தில் 25, கர்நாடகாவில் 14, மத்தியபிரதேசத்தில் 9, மகாராஷ்டிராவில் 11, உத்தரப்பிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 4, தத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையுவில் 2 தொகுதியிலும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளதைத் தொடர்ந்து, அனல்பறக்கும் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. 3ம் கட்ட தேர்தலில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 26 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க இருந்தது. சூரத் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால் பாஜ வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.இதனால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா போ்ட்டியிடும் காந்திநகர் உட்பட 25 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடக்கிறது.

இதைத் தவிர, மத்தியபிரதேச மாநிலம் குணா தொகுதியில் ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, கர்நாடகாவின் தார்வாட் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மபியின் விதிஷா தொகுதியில் முன்னாள் பாஜ முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மபியின் ராஜ்கர் தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் திக் விஜய் சிங், மேற்கு வங்க மாநிலம் பெர்ஹாம்பூர் தொகுதியில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, உபியின் மெயின்புரியில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ், மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே ஆகியோர் 3ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவார்.

நாளை வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசாருடன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடுத்ததாக 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் மே 13ம் தேதியும், 5ம் கட்ட தேர்தல் 49 தொகுதிகளில் மே 20ம் தேதியும், 6ம் கட்ட தேர்தல் 58 தொகுதிகளில் மே 25ம் தேதியும், கடைசி மற்றும் 7ம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் ஜூன் 1ம் தேதியும் நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

The post 93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: