சாகுபுரம் அருகே ஆபத்தான வளைவு பாலத்தில் அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா?

*வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ஆறுமுகநேரி : சாகுபுரம் அருகே வளைவு பாலத்தின் நடுவே சாலையில் ஏற்பட்டுள்ள அபாயகரமான பள்ளத்தால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரையடுத்து சாகுபுரம் அருகே வளைவான பாலம் அமைந்துள்ளது. இந்த பாலப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

தற்போது பாலத்தின் நடுவே உள்ள சாலையில் சுமார் 2 அடி ஆழம் 5 அடி அகலத்திற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் சாலையின் வலது புறம் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளம் இருப்பது தெரியாமல் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இப்பள்ளத்தில் சிக்குவதால் வாகனங்கள் நிலை தடுமாறி செல்கின்றன.

இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இச்சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தால் வாகனங்கள் ஊர்ந்தே செல்கின்றன. சில நேரங்களில் விபத்து நடக்கும் போது இரு பக்கங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கொளத்தூர் சீனிவாசன் நகரை சேர்ந்த தணிக்கைநாதன்(38) என்பவர் குடும்பத்துடன் காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்துள்ளார். கோயிலில் தரிசனம் முடித்து விட்டு நேற்று காலை 11.30 மணியளவில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளனர். சாகுபுரம் அருகே உள்ள வளைவான பாலத்தில் வரும்போது, எதிரே சிவகளையை சேர்ந்த தர்மலிங்கம்(42) என்பர் லாரியை ஓட்டி வந்துள்ளார்.

இந்த பாலத்தில் உள்ள பள்ளத்தில் லாரி இறங்காமல் இருக்க லாரியை வலது பக்கம் திருப்பியுள்ளார். இதனால் எதிரே தணிக்கைநாதன் ஓட்டிவந்த காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர். காரின் வலது புறம் மற்றும் பின்புறம் கடுமையாக சேதமடைந்தது. மேலும் அப்பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஆறுமுகநேரி போலீசார் விபத்தில் சிக்கிய 2 வாகனங்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

ஏற்கனவே இப்பகுதியில் ஆபத்தான வளைவில் பாலம் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் அதிகளவில் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து விபத்து நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாகுபுரம் அருகே ஆபத்தான வளைவு பாலத்தில் அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: