பிஇ, பிடெக் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியது

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானதையடுத்து பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்ககத்தில் வெளியிடப்பட்டது. உடனடியாக மாணவர்களுக்கு அவர்களின் செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டதுடன் அவர்கள் தேர்வு எழுதி பள்ளிகளில் இன்று முதல் மதிப்பெண் பட்டியல்களை கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தேர்வு முடிவுகள் விரைவாக மாணவர்களின் கைகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் உயர்கல்விக்கு அடுத்து விண்ணப்பிக்க இந்த ஏற்பாடுகள் வசதியாக இருக்கிறது. அதன்தொடர்ச்சியாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செலுத்தும் பணி இன்று தொடங்கியது. இதையடுத்து, அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்த சுமார் 500 பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்கள் சேர விரும்பினால் இன்று முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 21ம் தேதி ரேண்டம் எண்கள் வெளியிடப்படும் என்றும் ஜூலை 10ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஜூன் மாதம் 13ம் தேதி சான்று சரிபார்ப்பு பணி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடக்கும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

The post பிஇ, பிடெக் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: