வாஷிங்டன்: இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க நிதித்துறை அமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று முன்தினம் இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2032ம் ஆண்டிற்குள் ஐரோப்பாவின் ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும், 96.6 சதவீத பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்கும் நோக்கில், இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரி விதித்து அழுத்தம் கொடுத்திருந்தது. ஆனால், வர்த்தக ஒப்பந்தத்தில் அதிக கவனம் செலுத்திய ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்காமல் ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஐரோப்பியர்கள் உக்ரைன் மக்களின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும்போதெல்லாம், அவர்கள் உக்ரைன் மக்களை விட வர்த்தகத்திற்கே முன்னுரிமை அளித்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இந்தியாவிடமிருந்து வாங்குவதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியம் தனக்கு எதிரான போருக்கு தானே மறைமுகமாக நிதியளிக்கிறது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஐரோப்பாவை விட டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பெரிய தியாகங்களை செய்துள்ளது’ என்று குற்றம் சாட்டினார்.
