திருமணம் செய்பவர்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை : வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.21.50 கோடி மதிப்பில் திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய திருமண மாளிகையில் 10 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் திருமணம் செய்பவர்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று திருமணமான ஜோடிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதன் பிறகு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,”திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் போதெல்லாம் சென்னைக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வரும். இன்றைக்கு சென்னையில் இருக்கும் மேம்பாலங்களைப் பார்த்தாலே உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவை சுரங்கப்பாதைகளாக இருந்தாலும் சரி, பூங்காக்களாக இருந்தாலும் சரி, ஏன் மெட்ரோ ரயில் திட்டமாக இருந்தாலும் சரி… அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டவைதான்.

சென்னையில் ரூ.516 கோடி மதிப்பீட்டில் 19 பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. கட்டமைப்பு வசதியைப் பெருக்கிட வேண்டும். அதை நல்ல வகையில் உருவாக்கிட வேண்டும் என்பதில் அக்கறையாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. 2015ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட வெள்ளத்தால் சென்னை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆனால், இயற்கையாகவே எவ்வளவு மழை பெய்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் இன்றைக்குச் சென்னை மாநகரத்திற்கு உண்டு. திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களே இதற்குக் காரணம். ரூ.6,495 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன, “இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: