தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 5 % குறைத்து அரசாணை வெளியீடு..!

சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 5 % குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. உள்ளிட்ட பிரிவினருக்கு 55% ஆக இருந்த தேர்ச்சி மதிப்பெண் 50-ஆக குறைக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 45% ஆக இருந்த தேர்ச்சி மதிப்பெண் 40% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு ஏற்கனவே இருந்த 60% மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிலையில் மாற்றமில்லை.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இந்தியாவில் ஆசிரியர்கள் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற நிலை நடைமுறையில் உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு சேர போட்டி தேர்வில் பங்கேற்க முடியும்.

இதற்கு முன் TET தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பொது பிரிவினருக்கு 60 சதவிகிதம் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். அதாவது தேர்வு நடைபெறும் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கணக்கிடப்பட்டனர். இதே போல பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், உள்ளிட்ட பிரிவினருக்கு 55 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். அதாவது 82 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக எடுத்துக்கொள்ளப்படும்.

இதற்கிடையே தான் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 15 மற்றும் 16 நடைபெற்ற டெட் தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகள் நடைபெற்றன. இதற்கான ரிசல்ட் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் மற்ற மாநிலங்களில் ஆசிரியர்கள் தகுதி தேர்விற்கான மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாகவும், தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக ஆசிரியர்கள் சங்கங்கள் புகார் தெரிவித்து வந்தது. எனவே தகுதி தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தது. அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: