டெல்லி: இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்பிக்கள் செயல்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும்.
மக்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான தளமாக நாடாளுமன்றம் விளங்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரின் அறிவுரைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு எப்போதும் தயாராகவே இருக்கிறது. குடியரசுத் தலைவரின் உரை 140 கோடி மக்களின் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. நாடாளுமன்றத்தில் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார்.
ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒப்பந்தம் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தததால் உற்பத்தித் துறை தன் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். சிறப்பாக செயல்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்ய முடியும். விவசாயிகள், இளைஞர்கள், மீனவர்கள் இந்த ஒப்பந்தத்தால் பயன் அடைவார்கள். நீண்ட கால பிரச்னை என்ற நிலை மாறி நீண்ட கால தீர்வு என்ற நிலையை எட்டி இருக்கிறோம். பல்வேறு சீர்த்திருத்தங்கள் மேற்கொண்டு நீண்ட கால வளர்ச்சிக்கு வழி வகுக்கிறோம்.” இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
