கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

 

கொலம்பியா: கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் அந்நாட்டு எம்.பி உள்பட 15 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவின் குகுடாவில் இருந்து புறப்பட்ட விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்தில் எம்.பி டியோஜெனஸ் குயின்டெரோ உள்பட பேரும் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது.

புறப்பட்ட 12 நிமிடங்களில் சடேனா ஏர்லைன்ஸ் விமானம் HK4709-ன் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 13 பயணிகளும் விமானி உட்பட இருவர் என 15 பேர்கள் பயணித்துள்ளனர். இந்த நிலையில், எவருமே உயிர் தப்பவில்லை என கொலம்பியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. கொலம்பிய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான Diógenes Quintero என்பவரும் இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர்.

இந்த நிலையில், வெனிசுலா எல்லையில், விமானம் நொறுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விமானத்தின் அவசரகால சமிக்ஞை சாதனம் செயல்படுத்தப்படவில்லை என்றே சடேனா நிறுவனம் பின்னர் தெரிவித்தது.

கொலம்பியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாஃபே ரோஜாஸ் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில், HK4709 விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பான தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம் என பதிவு செய்திருந்தார். இதனிடையே, அரசுக்குச் சொந்தமான சடேனா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த விமானம், மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு அரசு அதிகாரி தெரிவித்தார்.

அந்த விமானம் குகுட்டாவிலிருந்து புறப்பட்டு, வெனிசுலா எல்லையருகே உள்ள ஒகானாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​மர்மமான முறையில் காணாமல் போனது. இந்த நிலையில், ஓகானாவில், உள்ளூர் மேயர் எமிலியோ கேனிசரேஸ் பிளாட்டா தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மக்கள் நலனுக்கான ஒன்றியம் என்ற அரசியல் கட்சி, தங்கள் நிர்வாகிகளின் குழுக்களில் உள்ள உறுப்பினர்களும் அந்த விமானத்தில் பயணம் செய்ததாகக் கூறியுள்ளது.

அந்த விமானம் ஏன் அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், விமானம் தரையிறங்கவிருந்த நேரத்திற்கு 11 நிமிடங்களுக்கு முன்பு, திடீரென கீழிறங்கியதாக பதிவான தரவுகளின் அடிப்படையில் உள்ளூர் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: