ரூ.915 கோடியில் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து; ஜவுளித்துறையில் தமிழ்நாடு அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

கோவை: ஜவுளித்துறையில் நாட்டிலேயே அதிக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் ஜவுளித்துறை சார்பில் கோவை கொடீசியா வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறும் சர்வதேச ஜவுளித்துறை மாநாடு 360 நிகழ்ச்சி இன்று காலை துவங்கியது. மாநாட்டை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ரூ.915 கோடி மதிப்பிலான 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சிறந்த ஏற்றுமதிக்காக முதலிடம் பெற்ற 5 நிறுவனங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பழைய நூற்பு இயந்திரங்களை நவீனப்படுத்த ரூ.11.70 லட்சம் வட்டி மானியம், விசைத்தறிகளை நவீனப்படுத்த விசைத்தறியாளர்களுக்கு ரூ.67.49 லட்சம் மானியம், புதிய துணி நூல் பதனிடும் ஆலை துவக்க மூலதன முதலீட்டு மானியம் ரூ.10.92 கோடி வழங்குவதற்கான ஆணை ஆகியவற்றை அவர் வழங்கினார். ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ.1.30 கோடி மானியம் வழங்கும் ஆணையை வழங்கிய உதயநிதி ஸ்டாலின், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழைகள் தொடர்பான 6 ஆராய்ச்சி திட்டங்களுக்கு மானியமாக ரூ.138.32 லட்சம் வழங்கும் ஆணையையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் ஜவுளித்துறைக்கு மையமாக விளங்குகின்றன. 30 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் ஜவுளித்துறை மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. நாடு முழுவதும் ஜவுளித்துறையில் பணியாற்றும் பெண்களில் 42 சதவீதம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். திராவிட மாடல் அரசு ஜவுளித்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய ஜவுளித்துறை பங்களிப்பு வழங்கும் என நம்புகிறேன். தமிழ்நாடு அரசின் ஆதரவு ஜவுளித்துறைக்கு எப்போதும் இருக்கும். தமிழ்நாடு அரசு 6 சதவீத மானியத்தை மறுபரிசீலனை செய்து உயர்த்தும் என உறுதியளிக்கிறேன். ஜவுளித்துறையில் அதிக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்து வருகிறது” என்றார்.

அமைச்சர் அர்.காந்தி பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக அதிக வேலைவாய்ப்புகளை ஜவுளித்துறை வழங்கி வருகிறது. ஜவுளித்துறைக்கு தமிழ்நாடு முதல்வர் அதிக முக்கியத்துவம் அளித்து, இத்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிவித்து வருகிறார். இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. பஞ்சு, கழிவு பஞ்சு மீதான 1 சதவீதம் செஸ் வரியை முதல்வர் நீக்கினார். ஜவுளித்துறை, விசைத்தறிகளுக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 19 மினி ஜவுளி பூங்கா (டெக்ஸ்டைல் பார்க்) அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 6 பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. ஜவுளித்துறை முதலீட்டிற்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது’’ என்றார்.

Related Stories: