சென்னை: உலக வங்கி நிதியுதவியுடன், சென்னை விரிவாக்கப்பட்ட மாநகரப் பகுதிக்கான நீர்வள பாதுகாப்பு திட்டம் குறித்து, சென்னை ஒருங்கிணைந்த நீர்த்தேக்க மேலாண்மை மைய வளாகத்தில் நீர்வளத்துறையின் சென்னை மண்டலத் தலைமை பொறியாளர் பொதுபணி திலகம் தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை மாநகரம் மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நீர்வள மேலாண்மை, குடிநீர் பாதுகாப்பு, வெள்ள அபாயக் குறைப்பு, நீர்த்தேக்கங்களின் ஒருங்கிணைந்த மேலாண்மை, மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல் அமைப்புகள் மூலம் நேரடி கண்காணிப்பு போன்ற அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரூ.619 கோடியில் சத்தியமூர்த்தி சாகர் அணையில் முழு நீர்த்தேக்க மட்டத்தினை உயர்த்தி, கொள்ளளவை 700 மில்லியன் கன அடி அதிகரித்தல், ரூ.105 கோடியில் திருநின்றவூர் ஏரி கொள்ளளவு மேம்பாடு, ரூ.155 கோடியில் திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி வட்டங்களில் கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்ட இணைப்பு கால்வாயின் முழுமையான சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மற்றும் செம்பரம்பாக்கம் நீர் தேக்கம் ஆகிய முக்கிய இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட பணிகளின் தொழில்நுட்ப அம்சங்கள் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ரூ.5,000 கோடியில் அரசுக்கு முன்மொழியப்படவுள்ள இத்திட்டம், நீர்வள சேமிப்பு, நிர்வாக மேம்பாடு மற்றும் உள்ளூர் நீர்ப் பயன்பாட்டு திறன் உயர்வு ஆகியவற்றின் மூலம் சென்னை மாநகரப் பகுதியின் நீர்வள பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கூட்டத்தில், உலக வங்கி குழுமத்தின் சார்பில் முன்னணி நீர் நிபுணர் டேவிட் லார்டு, மூத்த நீர் நிபுணர் மேத்தீவ்ஸ் முல்லக்கல், ஆலோசகர் சோம்யா சேதுராமன் கலந்து கொண்டனர்.
