சென்னை: தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம், இங்கிலாந்து நாட்டின் தேசிய இந்திய மாணவர் மற்றும் பழைய மாணவர் சங்கம், கிழக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து 2 நாள் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாட்டை சென்னையில் நடத்துகின்றனர். கலைவாணர் அரங்கில், இந்த மாநாட்டை தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் கல்வியின் மேம்பாட்டுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மக்கள்தொகையில் 6 சதவீதத்தை கொண்டுள்ள தமிழகம், நாட்டின் ஜிடிபிக்கு 9 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்றார் கணியன் பூங்குன்றனார். உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் உறவினராக கருதுவது தமிழ்ச்சமூகம். கல்விதான் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் இணைப்பு சக்தி. இவ்வாறு அவர் பேசினார்.
உயர் கல்வித் துறை செயலர் சங்கர் பேசுகையில், ‘செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உலகளாவிய காரணிகளால், உயர்க்கல்வி துறை வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, தமிழக பல்கலைக்கழகங்கள் வெறும் பட்டம் வழங்கும் நிறுவனங்களாக மட்டுமின்றி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் வாய்ப்புகளை உருவாக்கும் மையங்களாக மாற வேண்டும்’, என்றார்.
மாநாட்டில் டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, ஆஸ்திரியா நாட்டின் வியன்னா பல்கலைக்கழக வேந்தர் ஹெல்மெட் கேர்ன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக, தேசிய இந்திய மாணவர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் நிறுவனர் சனம் அரோரா வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக டிட்கோ நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி நன்றி கூறினார்.
இந்த மாநாட்டில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா உள்பட 20 நாடுகளைச் சேர்ந்த 400 பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் என ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை முன்னிட்டு பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. இன்று நடைபெறும் நிறைவு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
