சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடியின் (இ-செல்) தொழில் முனைவு பிரிவு, தேசிய தொழில்முனைவு கண்டுபிடிப்பு தளமான ஐடியாபாஸ் உடன் இணைந்து, தொழில்முனைவு உச்சி மாநாடு (இ-உச்சி மாநாடு) 2026-ல் ஸ்டார்ட்அப் பிட்ச் அரங்கை ஏற்பாடு செய்ய இருக்கிறது. இதன் முதன்மை நிகழ்வு பிப்ரவரி 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஐஐடி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்தியாவின் அடுத்த தலைமுறை ஸ்டார்ட்அப் நிறுவனர்களின் வளர்ச்சியை இணைந்து வேகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஐடியாபாஸ் என்பது இந்தியாவின் முன்னோடி ஊடக-ஒருங்கிணைப்பு கொண்ட ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாகும். நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தளம், அடிமட்ட கண்டுபிடிப்பு, தொலைக்காட்சி ஆகியவற்றின் துணிச்சலான கலவையாகும். நிதி, வழிகாட்டுதல், தெரிவுநிலைக்கான அணுகலை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவும், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் சாதிக்கக்கூடிய நிறுவனங்களை வளர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், ‘‘இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமையை தேசத்திற்கும் உலகிற்கும் சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்ற இது அதிகாரமளிக்கும். ஐஐடி மெட்ராசின் இ-செல்லுடன் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்தும் 1000க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் வரலாறுகளை 2030ம் ஆண்டுக்குள் உருவாக்குவதுடன், பல்வேறு செறிவுமிக்க தொழில்வாய்ப்புகள் இ-உச்சிமாநாடு 2026ல் காட்சிப்படுத்தப்பட்டு, நிறுவனர்களுக்கு தேசியத் தெரிவுநிலை, வழிகாட்டுதல், முதலீட்டாளர் அணுகல் ஆகியவை வழங்கப்படும்,’’ என்றார்.
