நகராட்சி நிர்வாக துறை ஒப்பந்தங்கள், நியமனங்கள் விவகாரம் அமலாக்கத்துறை கடிதத்தை வைத்து ஆரம்ப கட்ட விசாரணை தொடக்கம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: நகராட்சி நிர்வாக துறையில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் அமலாக்க துறை கடிதத்தின் அடிப்படையில் ஆரம்ப கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யுமாறும் அமலாக்க துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதே கோரிக்கையுடன், அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யுமாறு அதிமுக எம்பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த இரு மனுக்களும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆதிநாராயணன் வழக்கில் தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தை டிஜிபி அரசுக்கு அனுப்பி வைத்தார். அதை பரிசீலித்த அரசு விரிவான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது விசாரணை நடந்து வருகிறது. விசாரணையை முடிக்க 180 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்த விவகாரத்தில் நேரடியாக வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பில்லை. மனுதாரருக்கு எதிராக 25 வழக்குகள் உள்ளன. அதில் ஆறு வழக்குகள் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள். வழக்கு தொடர்ந்துள்ள இருவரில் ஒருவர் அரசியல்வாதி என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், அரசியல்வாதிகள் வழக்கு தொடரக்கூடாதா, மக்கள் பிரதிநிதிகள் கூட பொதுநல வழக்குகள் தொடர்ந்துள்ளனர் என்றனர்.

இதைத்தொடர்ந்து அமலாக்க துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, டிஜிபிக்கு வெறும் தகவல் மட்டும் அனுப்பி வைக்கவில்லை. ஆதாரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனால் ஆரம்பகட்ட விசாரணை நடத்தாமல் நேரடியாக வழக்குப்பதிவு செய்யலாம். மேல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி கடிதம் அனுப்பிய நிலையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்றார். அதற்கு டிஜிபி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் கபூர் சவுத்ரி, இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அடிப்படை உரிமை இல்லை. இருவரின் நம்பகத்தன்மையை ஆராய வேண்டும்.

எந்த வழக்கின் சோதனையில் ஆதாரங்கள் கிடைத்ததாக அமலாக்க துறை கூறுகிறதோ அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமலாக்க துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் டிஜிபி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாதது ஏன் என்று கேட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அரசு தாக்கல் செய்த பதில் மனுவுக்கு பதிலளிக்குமாறு ஆதிநாராயணன் தரப்புக்கும், ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறும் தமிழக அரசுக்கும், டி.ஜி.பி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: