சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, உபகரணங்கள் வாங்க விளையாட்டு வீரர்கள் 8 பேருக்கு ரூ.7.85 லட்சம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, உபகரணங்கள் வாங்க 8 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.7.85 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை தொடங்கி, அந்த நிதியில் இருந்து விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதியுதவி வழங்கப்படுவதுடன், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு வீரர்கள் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெறும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மேற்கொள்ளவும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பதக்கங்கங்கள் வென்ற தடகள வீரர்கள் ஜ.கோகுலபாண்டியன், வீ.நவீன்குமார் மற்றும் வீராங்கனைகள் ஜா.சுஜி, கா.யாமினி ஆகியோருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக மொத்தம் ரூ.1.35 லட்சத்திற்கான காசோலைகளையும், வில்வித்தை வீரர்கள் ப.சதீஷ்குமார் மற்றும் ர.பிரித்தீஸ்வரன் ஆகியோருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளையும் வழங்கினார்.

மேலும் பிப்ரவரி 2026ல் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசிய பாரா ரோடு சைக்ளிங் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்வதற்காக பாரா சைக்ளிங் வீரர் பி.பிரதீப்க்கு செலவீன தொகையாக 2,50,000 ரூபாய்க்கான காசோலையையும், ஆசிய ரோடு சைக்ளிங் சாம்பியன்ஷிப்பில் கலந்துக் கொள்வதற்காக சைக்ளிங் வீரர் ர.சஞ்சய் அவர்களுக்கு செலவீன தொகையாக 2,00,000 ரூபாய்க்கான காசோலையையும் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியிலிருந்து துணை முதல்வர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டு போட்டிகளில் பீச் வாலிபால் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள் க.தீபிகா, சு.பவித்ரா, ம.சுவாதி, அ.தர்ஷினி மற்றும் வீரர்கள் வி.ராஜேஷ், சோ.பரத், செ.அபிதன், உ.பூந்தமிழன் ஆகியோர் துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்பட அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Related Stories: