சென்னை: கால்நடை ஆய்வாளர் நியமனத்திற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த 2025 ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பணியில் சேரும் கால்நடை ஆய்வாளர்களுக்கான அடிப்படை கல்வி தகுதியை பிளஸ் 2 என்பதை மாற்றி பட்டப் படிப்பிற்கு உயர்த்தி உத்தரவிட்டது. இந்த உத்தரவு இந்திய கால்நடை மருத்துவ பேரவை சட்டத்திற்கு எதிராக இருப்பதாக கூறி கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை உதவி மருத்துவராக பணிபுரியும் டாக்டர் முத்துராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டார். உத்தரவில், இந்திய கால்நடை மருத்துவ பேரவை சட்டத்திற்கு எதிராக விதிகளை தமிழ்நாடு அரசு வகுக்க முடியாது. கால்நடை ஆய்வாளர்களுக்கு பிளஸ் 2 படிப்புடன் கூடிய பயிற்சியே போதுமானது, பட்டப்படிப்பு அவசியமில்லை. எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், கால்நடை ஆய்வாளர்கள் நியமனத்திற்காக வெளியிட்டு இருந்த அறிவிப்பாணையும் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
