டெல்லி: அசல் ஆவணங்கள் இருந்தால்தான் பத்திரப்பதிவு செய்ய முடியும் என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இனி பத்திரப் பதிவு செய்யும்போது அசல் ஆவணங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். பத்திரப் பதிவுகளில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் விதமாக தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளர் வழங்கும் தடையில்லா சான்று இல்லாமல் பத்திரப்பதிவு செய்யக் கூடாது. பூர்வீக சொத்தாக இருந்தால் முந்தைய மூல ஆவணம் இல்லை எனில், அந்த சொத்திற்கான பட்டா வழங்கப்பட வேண்டும். அசல் ஆவணம் தொலைந்துவிட்டால் போலீஸ் துறை வழங்கிய கண்டறிய முடியாத சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஆவணம் தொலைந்ததை அறிவிக்கும் வகையில் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டதை கொண்டு வர வேண்டும்.
