தை கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக திருத்தணி முருகன் கோயில் போற்றப்படுகிறது. இன்று தை கிருத்திகை மற்றும் முருகப் பெருமானை தரிசிக்க உகந்த நாளான செவ்வாய்க்கிழமை என்பதால், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர். இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பின்னர், தங்க கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பொது வரிசை மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன வழியில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தை கிருத்திகையொட்டி சாமி தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மற்றும் திருப்படிகள் வழியாக கோயிலுக்கு சென்றனர். கோயில் மாட வீதிகளில் அரோகரா முழக்கங்களுடன் பொது வழியில் 3 மணி நேரத்துக்கும்மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மாலை வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வீதிஉலா நடக்கிறது. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு இருந்தது.

Related Stories: