ராணுவ தாக்குதல் நடத்த முயற்சிக்க வேண்டாம்; நீங்கள் காற்றை விதைத்தால் சூறாவளியை அறுவடை செய்வீர்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

துபாய்: “ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த முயற்சிக்க வேண்டாம். நீங்கள் காற்றை விதைத்தால் சூறாவளியை அறுவடை செய்வீர்கள்” என அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அதிபராக மசூத் பெசெஷ்கியான் தற்போது பதவி வகித்து வருகிறார். ஈரான் கடந்த பல ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி, ஈரானிய நாணயமான ரியால், ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக பெரும் வீழ்ச்சி அடைந்தது.

பொருளாதார நெருக்கடி, நாணய மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் டிசம்பர் 28ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், அரசுக்கு ஆதரவாகவும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களில் இதுவரை 5,848 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும், அரசுக்கு எதிராக போராடும் 41,280 பேரை ஈரான் ராணுவம் கைது செய்துள்ளது.

ஈரானில் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு துணை நிற்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். ஈரானில் அமைதியான போராட்டக்காரர்களை ஈரான் ராணுவம் தொடர்ந்து கொன்றாலோ அல்லது கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றினால அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கும் என மிரட்டல் விடுத்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான யுஸ்எஸ் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் அதனுடன் வரும் போர்க்கப்பல்கள் ஈரான் பிராந்தியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் சோஷியல் ட்ரூத் சமூகவலைதளத்தில், “நிறைய கப்பல்கள் தெஹ்ரான் திசையை நோக்கி செல்கின்றன. ஒரு பெரிய கப்பல்படை ஈரான் நாட்டை நோக்கி செல்கிறது” என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்கா ராணுவ தாக்குதலை நடத்த முயற்சிக்க வேண்டாம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதனை வௌிப்படுத்தும் விதமாக தெஹ்ரானில் உள்ள எங்கெலாப் சதுக்கத்தில் ஒரு பெரிய சுவரோவியம் வரையப்பட்டுள்ளது.

அந்த சுவரோவியத்தில், “ஒரு விமானம் தாங்கி கப்பலின் மேல்தளத்தில் சேதமுற்ற, வெடித்து சிதறிய போர் விமானங்கள் காணப்படுகின்றன. அந்த தளம் சடலங்களாலும், ரத்தத்தாலும் நிறைந்துள்ளது. அந்த ரத்தம் தண்ணீரில் வழிந்தோடி அமெரிக்க தேசிய கொடியை பிரதிபலிப்பது போல் உள்ளது. இதையொட்டி எழுதப்பட்டுள்ள வாசகத்தில், “நீங்கள் காற்றை விதைத்தால் சூறாவளியை அறுவடை செய்வீர்கள்” என பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி
ஈரானை சுற்றி உள்ள பகுதிகளில் அமெரிக்காவின் போர் கப்பல்கள், விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் ஈரான், அமெரிக்கா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி அமைப்பினர் களமிறங்கி உள்ளனர். செங்கடல் வழியாக அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் பிற கப்பல்கள் சென்றால் அதனை தாக்குதவற்கு ஹவுதி பிரிவினர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: