அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராடிய ஆண் செவிலியர் போலீசால் சுட்டுக் கொலை: அதிபர் டிரம்ப் அரசுக்கு கவர்னர் கண்டனம்

மின்னியாபோலிஸ்: அமெரிக்காவில் அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராடிய நர்சு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னியாபோலிஸ் நகரில், குடியேற்ற விவகாரம் தொடர்பாக கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 7ம் தேதி ரெனி குட் என்பவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள், கடந்த 3 வாரங்களில் மூன்றாவது முறையாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

விட்டியர் பகுதியில் நேற்று அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி (37) என்பவரை, உள்நாட்டு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவு செவிலியரான இவர், கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், தங்களை தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதில், அதிகாரிகள் அலெக்ஸ் ஜெப்ரியை தரையில் தள்ளி சரமாரியாக தாக்கியதுடன், அவர் பிடியில் இருந்தபோதே மிக அருகில் வைத்து 10 முறை சுட்டுக் கொல்வது பதிவாகியுள்ளது.

அவர் சட்டப்பூர்வமாக துப்பாக்கி உரிமம் வைத்திருந்தவர் என்பதும், அரசின் குடியேற்ற கெடுபிடிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாகாண கவர்னர் டிம் வால்ஸ், ‘இது திட்டமிடப்பட்ட வன்முறை மற்றும் மன்னிக்க முடியாத செயல். உடனடியாக 3,000 பாதுகாப்பு படை வீரர்களையும் இங்கிருந்து திரும்பப் பெற வேண்டும்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அதிபர் டிரம்ப், ‘உள்ளூர் நிர்வாகம் போராட்டத்தை தூண்டிவிடுகிறது’ என்று சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியுள்ளார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டத்தில் குதித்ததால், கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். நிலைமை மோசமடைந்து வருவதால் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: