வர்த்தகம், பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்; இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்று ஒப்பந்தம்: இறக்குமதி வரியை குறைத்து ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே நடைபெற்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்தியாவின் 77ம் ஆண்டு குடியரசு தின விழா நேற்று நடைபெற்ற ேபாது, டெல்லியில் நடந்த விழாவில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் நடைபெற்ற 16ம் ஆண்டு உச்சிமாநாட்டின் போது, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன.

உலகின் மொத்த உற்பத்தியில் கால் பங்கை கொண்டுள்ள இரு தரப்பும் ஒன்றிணைந்திருப்பது, சுமார் 200 கோடி மக்களுக்கு பயனளிக்கும் மிகப்பெரிய வர்த்தக உடன்படிக்கையாக கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஐரோப்பா செல்வது எளிதாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக பாதுகாப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இரு தரப்பும் கைகோர்த்துள்ள நிலையில், ஐரோப்பாவின் 15,000 கோடி யூரோ மதிப்புள்ள பாதுகாப்பு திட்டத்தில் இந்திய நிறுவனங்களும் பங்கேற்கலாம். ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரி 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதோடு, 99 சதவீத பொருட்களுக்கான வர்த்தக வரிகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து தலைவர்கள் பேசுகையில், ‘உலக வர்த்தகத்தில், தற்போதைய ஒப்பந்தமானது புவிசார் அரசியல் நிலைப்படுத்தியதாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளனர். அடுத்த 6 மாத கால சட்ட ரீதியான ஆய்வுகளுக்குப் பிறகு, 2026ம் ஆண்டு இறுதியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி, 2027ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா கண்டனம்
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறும்போது, ‘ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து சுத்திகரிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதன் மூலம், தங்களுக்கு எதிரான போருக்கு அவர்களே நிதியளித்துக்கொள்கிறார்கள். ரஷ்யாவை பொதுவெளியில் கண்டித்துவிட்டு, இந்திய எரிசக்தி வர்த்தகம் மூலம் தனிப்பட்ட முறையில் நிதியளிப்பது ஐரோப்பாவின் அப்பட்டமான பாசாங்குத்தனம்’ என்று கடுமையாக சாடியுள்ளார். இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் 99 சதவீத பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட உள்ளன. சட்டரீதியான சரிபார்ப்புகளுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தம் 2027ம் ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: