நியூயார்க்: இந்தியா மீதான ஏற்றுமதி பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் மீது போர் நடத்தும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25 சதவீதம் சேர்த்து மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தார். இதனால் இருநாட்டு உறவுகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா குறைத்து விட்டது.
இதனால், இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு எடுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில்,’ அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீதம் அடங்கும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர்களின் ரஷ்ய க்சா எண்ணெய் கொள்முதல் சரிந்துவிட்டது.
வரிகள் இன்னும் தொடர்கின்றன. 25 சதவீத ரஷ்ய எண்ணெய் வரிகள் இன்னும் தொடர்கின்றன. அவற்றை அகற்ற ஒரு வழி இருப்பதாக நான் கருதுகிறேன். எங்கள் சோதனை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். அதே சமயம் இந்தியா மீது வரி விதிக்க ஐரோப்பிய நட்பு நாடுகள் மறுத்துவிட்டன. இந்தியாவுடன் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பியதால் வரி விதிக்க மறுத்துவிட்டன’ என்றார்.
* கனடாவுக்கு 100 சதவீத வரி
அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்ரூத் சோசியலில் பதிவிட்டதில்,’ அமெரிக்க சந்தையில் சீனப் பொருட்கள் நுழைவதற்கான ஒரு வழியாக கனடா செயல்படக்கூடும். எனவே சீனாவுடன் ஒட்டாவா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்கா 100% வரி விதிக்கும் ’ என்று குறிப்பிட்டுள்ளார்.
