18 மாகாணங்களில் அவசரநிலை அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: வீடுகளில் முடங்கிய 20 கோடி மக்கள்

டல்லாஸ்: ஆர்க்டிக் வெடிப்பால் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் கடுமையான பனிப்புயலை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் அமெரிக்காவில் மோசமான பனிப்புயல் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவின் தெற்கு பகுதிக்குள் நுழைந்துள்ள இந்த புயல் வடகிழக்கு நோக்கி நகரும் என்றும், வாஷிங்டன் முதல் நியூயார்க் மற்றும் பாஸ்டன் வரை சுமார் ஒரு அடி (30 சென்டிமீட்டர்) பனியைப் பொழியும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குறிப்பாக சூறாவளியால் ஏற்படும் சேதத்திற்கு இணையாக இப்பனிப் புயலின் சேதம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. டெக்சாஸின் சில பகுதிகளில் ஏற்கனவே உறைபனி மழை பெய்யத் தொடங்கி உள்ளது. பனிப்புயல் சில தினங்களுக்கு நீடிக்கும் என்பதால் வாஷிங்டன் டிசி உள்ளிட்ட 18 மாகாணங்களில் வானிலை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சிகாகோ மற்றும் பிற மத்திய மேற்கு நகரங்களில் பள்ளிகள் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தேவாலயங்கள் ஞாயிறு பிரார்த்தனைகளை இணையம் வழியாக நடத்தின. லூசியானாவில் நடைபெற்ற கார்னிவல் அணிவகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை பாதிக்கும் பனிப்புயலால் சுமார் 20 கோடி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பனியால் மூடப்பட்ட மரங்களும், மின்கம்பிகளும் புயல் முடிந்த பிறகும் விழக்கூடும் என்பதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக சில நாட்கள் வீடுகளிலேயே தங்க வேண்டியிருக்கும் என்பதால் பொதுமக்கள் உணவுப்பொருட்களை வாங்கி குவித்துள்ளனர். இதனால் பல சூப்பர்மார்க்கெட்டுகளில் அனைத்து பொருட்களும் விற்று தீர்ந்தள்ளன. மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை வீசும் குளிர் காற்றால், எந்த ஒரு இடமும் 10 நிமிடங்களுக்குள் பனிக்கடியாக மாறிக் கொண்டிருக்கிறது.

இதனால் நெடுஞ்சாலைகளில் கார்களில் பயணிப்பது கூட ஆபத்தானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பனிப்புயல் பாதிப்பால், நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமைக்காக சுமார் 2,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக டல்லாசில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 70 லட்சத்துக்கும் அதிகமான உணவு பொட்டலங்கள், 6 லட்சம் போர்வைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: