மாமல்லபுரம் நாட்டிய விழாவில் அனைத்து கலைஞர்களுக்கு சான்றிதழ்

 

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்திய பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் ஒன்றிய மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து பல ஆண்டுகளாக நாட்டிய விழாவை டிசம்பரில் தொடங்கி ஜனவரி வரை நடத்தி வருகிறது.

இந்தாண்டு கடந்த மாதம் 21ம் தேதி நாட்டிய விழா தொடங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நிகழ்ச்சியில், நாமக்கல் கலைமாமணி பிரபு வேணுகோபால் குழுவின் நாதஸ்வர சங்கம், மும்பை கிரித்யா நரசிங் ராணா குழுவின் ஒடிசி நடனம், திண்டுக்கல் கலைமாமணி சரயு சாய் ஷிர்ஸ்டி குழுவின் பரதநாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில், உள்ளூர் மக்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஆர்வமாக கலந்துகொண்டு குளிரையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்தனர். தொடர்ந்து அனைத்து கலைஞர்களுக்கும் செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல், விழுப்புரம் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனம் ஆகியோர் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். மேலும் நாட்டிய விழாவை கண்டு ரசிக்க ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள் சொகுசு பேருந்து, கார், வேன் மற்றும் அரசு பேருந்துகளில் குவிந்து வருவதால் மாமல்லபுரம் களை கட்டியுள்ளது.

Related Stories: