மக்களின் கனவை கேட்டதற்கே எடப்பாடி பழனிசாமி ஏன் அலறுகிறார்? அமைச்சர் ரகுபதி கேள்வி

சென்னை: அமைச்சர் ரகுபதி வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: மக்களை ஏமாற்றும் காதில் பூ சுற்றும் வேலையை எல்லாம் செய்த பழனிசாமி, ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டத்தை பற்றிப் பேசுவதற்கு அருகதை அற்றவர். உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ என்று ஒரு திட்டத்தை திமுக அரசு அறிவித்து, மக்களின் கனவைத்தான் கேட்கிறது. அதன்பிறகுதான் அது திட்டமாகச் செயல்வடிவம் பெறும்.

கனவைக் கேட்டதற்கே பழனிசாமி ஏன் அலறுகிறார், ஆகாயத்திற்கும் வானத்திற்கும் குதிக்கிறார்? ஆட்சி முடியும் நேரத்தில், கனவைச் சொல்லுங்கள் என்று கேட்கிறார்களே எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் பழனிசாமி. 2021ல் ஆட்சி முடியும் நேரத்தில் குறைகளை அரசுக்குத் தெரிவித்துத் தீர்வு காணும் 1100 எண் தொலைப்பேசி சேவை திட்டத்தைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 10 நாள் முன்பு பழனிசாமி கொண்டு வந்தாரே அது கடைந்தெடுத்த கபட வேலை இல்லையா?

2021 தேர்தல் தேதி அறிவிப்புக்கு இரண்டு நாள் முன்பு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது பழனிசாமியின் உதடுகள் தானே, மினி கிளினிக் தொடக்கம், 9, 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ், வன்னியர் உள் ஒதுக்கீடு என எத்தனை குட்டிக்கரணங்களை தேர்தல் நேரத்தில் பழனிசாமி அடித்தார்?

மக்களைவிட்டு எப்போதுமே எட்டி நிற்கும் எடப்பாடிக்கு இந்த திட்டம் எட்டிக்காயாகத்தான் இருக்கும். அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களின் மீது அவதூற்றை பரப்புவதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் பழனிசாமி. வீண் அவதூறுகளைப் பரப்பிப் புலம்புவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்கு பயனுள்ள கனவு எதையாவது வைத்திருந்தால் தெரிவிக்கட்டும். அதையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும். அடுத்த முதல்வர் நான்தான் என்ற பழனிசாமியின் கனவு மட்டும் எப்போதும் கானல் நீராகத்தான் இருக்கும். இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: