ஒன்றிய அரசின் புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடந்த UmagineTN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: “UmagineTN 2026” மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு என்னுடைய வாழ்த்துகள். தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமான கருவி இல்லை; அது சாமானியர்களை Empower செய்யும் கருவி என்ற பார்வையுடன் தமிழ்நாட்டின் ஐ.டி. பாலிசியை கலைஞர் வார்த்தெடுத்தார்.

தொழில்நுட்பம் ஒரு துணை செயல்பாடாக இல்லாமல், பொருளாதார சக்கரத்தின் மைய அச்சாக இன்றைய நிலையில் மாறியிருக்கிறது. நாம் பாரம்பரியமாக வலுவாக இருக்கும் சர்வீஸ் செக்டாரில் இருந்து, உயர்நுட்பம், புத்தாக்கம் மற்றும் புதுமை மையமான பொருளாதாரத்திற்கு தமிழ்நாடு நகர்ந்து வருகிறது. நெக்ஸ்ட் ஜென் G.C.C.-க்களின் மையமாக சென்னை நகரம் உருவெடுத்து வருகிறது. அட்வான்ஸ்டு R&D, A.I,, பின்-டெக், வாகன மென்பொருள், பொறியியல் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு மையங்கள் இங்கு உருவாகி வருகிறது. எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், ஸ்பேஸ், டெக்ஸ்டைல், புதுப்பிக்கத்தக்க எனர்ஜி போன்ற துறைகளில் வலுவான அடித்தளத்தின் A.I, ஆட்டோமேஷன், டேட்டா பேஸ் மற்றும் டிஜிட்டல் வடிவமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்திருக்கும் மாநிலங்கள் உலகளவிலேயே மிகவும் குறைவு.

இப்படி, உற்பத்தி திறனையும், டிஜிட்டல் புதுமையையும் ஒருங்கிணைக்கும் தொழிற்சூழல் இயல்பாகவே அமைந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆனால், இது தானாகவே நிகழ்ந்துவிடவில்லை. திராவிட மாடல் ஆட்சியின் வழிநடத்திய காரணத்தினால் தான் இது உருவாகியிருக்கிறது. டெக்னாலஜியை வெறும் பொருளாதார வளர்ச்சி கருவியாக பார்க்காமல், சமூக முன்னேற்றத்திற்கான சாதனமாக பார்ப்பதுதான் திராவிட மாடல். பாலிசி லெவலில் தொடங்கி, கல்வி நிறுவன செயல்பாடுகள், நான் முதல்வன் போன்ற திறன் மேம்பாட்டு முயற்சிகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், உலகளாவிய தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு முகமைகள் வரை எல்லாம் ஒரே பாதையில், ஒரே இலக்குடன் சேர்ந்து செயல்படும் தமிழ்நாட்டின் நிர்வாக கட்டமைப்பும், தொழில்நுட்ப கண்ணோட்டமும்தான் நம்முடைய வளர்ச்சிக்கான காரணம்.

Deep tech திறன் மேம்பாட்டு திட்டங்கள், டேட்டா செண்டர் பாலிசி, ஆராய்ச்சி கட்டமைப்பில் தொடர்ச்சியான முதலீடுகள் இவை எல்லாம் சேர்ந்து I.T. சேவை மையம்’ என்ற அடையாளத்தில் இருந்து, முழுமையான தொழில்நுட்ப மற்றும் புதுமை சக்தியாக தமிழ்நாட்டை மாற்றும் தெளிவான பாதையை வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றம் ஒரு நகரத்தில் மட்டுமே சுருங்கிவிடாமல், மாநிலம் முழுவதும் சமமாக பரவுவதையும் உறுதி செய்திருக்கிறோம்.
நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவது போன்று ஒரு டேட்டாவை சொல்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில், 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடைபெறுகிறது என்று ஒன்றிய அரசின் STPI வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேட்பவர்களுக்கு ஒன்றிய அரசு சொல்லும் இந்த தரவுதான் என்னுடைய பதில்.

தமிழ்நாட்டின் புத்தாக்க சூழலும், இந்தியாவிலேயே சிறந்த ஒன்றாக இருக்கிறது. பெரும் I.T. மற்றும் பொறியியல் மனிதவளம், உலகத்தர கல்வி நிறுவனங்கள், பல சிறப்பு மையங்கள், இந்தியாவின் முதலாவது டீப் டெக் இன்குபேட்டர் – எல்லாம் இணைந்து, ஆராய்ச்சியில் இருந்து அறிவுசார் சொத்துகள் உருவாக்கம், உலகச் சந்தை அடைவு வரை முழுமையான பயணத்தை சாத்தியமாக்கி இருக்கிறது. இதன் ரிசல்ட் தான், இந்தியாவில் பதிவாகும் நான்கில் ஒரு காப்புரிமை அதாவது ‘பேட்டண்ட்’ விண்ணப்பம் தமிழ்நாட்டில் இருந்து பதிவாகும் வகையில் நாம் முன்னணியில் இருக்கிறோம்.

நிதி, நில நிர்வாகம், காவல், மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளை கையாளும் மாநில அளவிலான டிஜிட்டல் தளங்கள் ஆகியவை மக்கள் அளவிலான டிஜிட்டல் நிர்வாகம் நடைமுறையில் சாத்தியமானது என்று நிரூபிக்கிறது. இது எல்லாவற்றிற்கும் எது மையக் காரணம் என்றால், நம்முடைய ஆற்றல்மிக்க மனிதவளம்தான். இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தான், A.I. சந்தாவுடன் கல்லூரி மாணவர்களுக்கு லேட்டஸ்ட் மாடல் லேப்டாப்களை ‘உலகம் உங்கள் கையில்’ என்று அந்த திட்டத்தின் மூலமாக வழங்கியிருக்கிறோம்.

இதை செலவு என்றோ, இலவசம் என்றோ நாங்கள் கருதவில்லை. தொழில்நுட்பம் எல்லோருக்கும் சமமாக கிடைப்பதற்கு எதிர்காலத்தை நோக்கிய முதலீடாகதான் இதை பார்க்கிறோம். தமிழ்நாட்டின் இலக்குகள் தெளிவானது. புது யுகத்தின் டெக்னாலஜியில் தமிழ்நாடுதான் டாப்-ல் இருக்க வேண்டும். ஆனால், அந்த வளர்ச்சியில் யாரும் விட்டுப்போக கூடாது; அறிவானாலும், தொழில்நுட்பமானாலும் எல்லோருக்குமானதாக அது இருக்க வேண்டும். அப்படி ஒரு வருங்காலத்தை தான் நம்முடைய இளைய தலைமுறைக்காக திராவிட மாடல் அரசு கட்டி எழுப்பி வருகிறது. இன்றைய UMAGINE வருங்காலத்தை நோக்கிய நம் பயணத்திற்கான பிரகடனம். நம் நாளைய வெற்றிக்கான தொடக்கம். வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்பி, டி.ஆர்.பாலு, மெட்டா இந்தியா நிறுவனத்தின் இந்திய தலைவர் அருண் னிவாஸ், சிமிமி தமிழ்நாடு தலைவர் உன்னிகிருஷ்ணன், எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் சகோதரர் மதன்கார்க்கி, முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், இயக்குநர் ஆல்பிஜான் வர்கீஸ், மேலாண்மை இயக்குநர்கள் கார்த்திகேயன், ரமண சரஸ்வதி, வைத்திநாதன், பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* ரூ.9,820 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதல்வர் தொடங்கி வைத்த Umagine TN 2026 மாநாட்டில், Umagine 2026 Artificial Intelligence, Quantum Computing, SpaceTech, Deep Tech, Tech Leadership, Geospatial Innovation, AVGC, SaaS Leadership,, குறித்த தொழில்நுட்பம் மற்றும் தொழில் மேம்பாடு, புத்தொழில், புத்தாக்கம் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்கள், 150க்கும் மேற்பட்ட துறைசார் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். தொடக்க விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் EROS Gen AI, Better Compute Works Inc, Phantom Digital Effects Limited, Rewin Health, Cube84, WeLoadin Studio LLP ஆகிய நிறுவனங்களுடன் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் ரூ.9,820 கோடி முதலீட்டில் 4,250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும்.

Related Stories: