மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு டிச.17ல் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்காக தலைமை செயலர் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார். தலைமை செயலரிடமும் ‘‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்’’ என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு தலைமைச் செயலர், ‘‘நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த உத்தரவில் சட்டம், ஒழுங்கு பிரச்னை இருப்பதால் மேல்முறையீடு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘சட்டம், ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. ஏற்கனவே திண்டுக்கல், கன்னியாகுமரி வழக்குகளில் நான் பிறப்பித்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை’’ என்றார்.
தலைமைச் செயலர் இது தொடர்பாக பதிலளிக்க நான்கு வார கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதையடுத்து ‘‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு உரிய பதில் கூறியே ஆக வேண்டும். நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன்’’ என கேட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கு இன்று (ஜன.9) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
