முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு’ ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 20ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. 2026ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். கவர்னர் உரை தயாரிக்கும் பணியில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் கவர்னர் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (செவ்வாய்) காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடந்தது. அமைச்சரவை கூட்டத்தில், வருகிற 20ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடர், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதனால், கவர்னர் உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவது குறித்தும், அதற்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், கடந்த 3ம் தேதி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். அதன்படி அரசு அறிவித்த ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு’ தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். அதில் விரிவான தகவல்கள் இடம்பெறும்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமிதத்துடன் தந்த ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு’ முதல்வர் தலைமையில் இன்று (நேற்று) நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றியை உரிதாக்குகிறோம்” என்று கூறி உள்ளார். வருகிற 20ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடர், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: