சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமக தந்தை, மகன் என இரு அணியாக பிரிந்து தேர்தலை சந்திக்கிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாமக தலைவர் அன்புமணி, சென்னை பசுமை சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று அவருடன் நேரடியாக சந்திப்பு நடத்தினார். இதில், பாமக தலைவர் அன்புமணி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைவதாக அறிவித்தார்.
அதேநேரம் ராமதாஸ் பற்றிய கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியோ, அன்புமணியோ பதில் அளிக்காமல் புறப்பட்டனர். இதையடுத்து பாமகவுக்கு 17 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா சீட் அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது. எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல்பாடுகள் ராமதாஸ் தரப்பை கொந்தளிக்க செய்திருக்கிறது. அதிமுக – பாமக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக எந்த பக்கம் செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாமகவுக்கு ராமதாஸ் மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். கடந்த மாதம் 17ம்தேதி முதல் ராமதாசே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாமக உடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது. ராமதாஸ் மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர். இந்நிலையில் அன்புமணி பாமக சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது.
அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிப்பதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
* நாளை முதல் விருப்ப மனு
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாமக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுக்களை நாளை (9ம்தேதி) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் தைலாபுரம் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
