ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் மீதான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அன்புமணி தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனு: காவல்துறை பதில் அளிக்க உத்தரவு

சென்னை: கடந்த நவம்பர் 4ம் தேதி சேலம் மேற்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் அன்புமணி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அருள் தரப்பினர் அன்புமணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சேலம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதில் சட்டமன்ற உறுப்பினர் அருள் தரப்பில் அளித்த புகாரில் அன்புமணி தரப்பினர் மீது இரண்டு வழக்கும், அன்புமணி தரப்பினர் அளித்த புகாரில் எம்.எல்.ஏ அருள் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது மொத்தம் 3 வழக்கும் காவல் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அருளுக்கு எதிராக புகார் அளித்த செந்தில்குமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தாம் அளித்த புகார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஏத்தாப்பூர் காவல்துறை சட்டமன்ற உறுப்பினர் அருள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆனால் காவல்துறை எந்த மேல் நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அருளுக்கு எதிராக மட்டும் 2 புகார்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அருள் தரப்பினர் அளித்த புகார் மீது தங்களின் தரப்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருள் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால் நியாயமான முறையில் விசாரணை நடைபெறவில்லை.

காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். எனவே, அருள் மீதான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, காவல்துறை தரப்பில் இந்த புகார் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற நேரிடும் என்று கூறி, இந்த மனுவுக்கு பதில் தருமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: