சென்னை: பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்திய அரசின் அறிவியல் – தொழில்நுட்பத்துறை, ‘இன்ஸ்பயர்’ விருது வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டு முதல் புத்தாக்க அறிவியல் ஆய்வு, ‘மானக்’ என்ற பெயரில் விருது வழங்கி வருகிறது. 6-10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல், புதுமையான சிந்தனை கலாச்சாரத்தை வெளிக்கொணர்வதே இந்த விருதின் நோக்கம். இந்த வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரு பள்ளியிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை 3 மாணவர்களும், 11 மற்றும் 12ம் வகுப்பு அறிவியல் பிரிவில் இருந்து, 2 மாணவர்களும் என மொத்தம் 5 மாணவர்களை விருதுக்கு பதிவு செய்யலாம். இதில் ஒரு லட்சம் யோசனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதிரி உருவாக்கவும், மாவட்ட அளவிலான கண்காட்சி போட்டியில் பங்கேற்கவும் மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் நேரடியாக வழங்கப்படுகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். மாணவர்களின் பெயர், வங்கிக் கணக்கு புத்தகத்தில் உள்ளதுபோல பதிவு செய்தல் மிகவும் அவசியம். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான கண்காட்சி போட்டிக்கு முன்னேறுவர், அதில் சிறந்தவர்கள் தேசிய அளவிலான கண்காட்சி போட்டிக்கு தகுதி பெறுவர்.
அதன்படி, டெல்லியில் உள்ள ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அகமதாபாத்தில் உள்ள தேசிய புத்தாக்க மையம், சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைப்புடன், 2023-24 மற்றும் 2024-25 ஆகிய கல்வியாண்டுகளுக்கான இன்ஸ்பயர்-மானக் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களின் படைப்புகளை மேம்படுத்துவதற்கான 2 நாள் பயிற்சி பட்டறை சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இன்ஸ்பயர்-மானக்கின் மாநில அளவிலான அறிவியல் மாதிரி கண்காட்சி மற்றும் போட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி, கோவில்பட்டியில் கடந்த நவம்பர் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் இருந்து 222 மாணவர்கள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிதியுதவியின் அடிப்படையில் அவர்கள் மாதிரிகளை உருவாக்கி, 2025 அக்டோபர் முதல் நவம்பர் முதல் வாரம் வரை ஆன்லைன் முறையில் நடந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவ-மாணவிகள் நேற்று அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டு தங்கள் கண்டுபுடிப்புகளை பற்றி எடுத்துரைத்தனர்.
இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளை ஆராய்ந்து அவர்களின், படைப்புகளை மேம்படுத்தும் விதமாக சிறந்த அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கினர். இந்த 20 மாணவ-மாணவிகள் தேசிய அளவிலான கண்காட்சி போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தொழில் ஒத்துழைப்பு மைய இயக்குநர் சண்முக சுந்தரம் கூறுகையில், ‘‘இந்த பயிற்சி பட்டறையை அண்ணா பல்கலைக் கழகம் முதன்முறையாக நடத்துகிறது.
தேசிய அளவிலான கண்காட்சி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்த மாணவர்கள் அனைவரும் தங்கள் படைப்பாற்றலை சிறப்பாக எடுத்துரைத்னர். தேசிய அளவில் வெற்றி பெற்றால் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையாக கிடைக்கும். சிறைந்த 60 கண்டுபிடிப்பாளர்கள் ஜப்பான் நாட்டு தொழில் நிறுவனங்களை பார்வையிட அழைத்துச் செல்லப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* 2009-10 முதல் 2016-17 வரை, இன்ஸ்பயர் விருது திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 73,856 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
* 2018-19 முதல், இந்த திட்டம் இன்ஸ்பயர்-மானக் விருது என மறுசீரமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.
* தமிழகத்தின் 38 மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி, தனியார் மற்றும் பிற பள்ளிகளிலிருந்து 2023-24 கல்வியாண்டில் 991 மாணவர்களும், 2024-25 கல்வியாண்டில் 1197 மாணவர்கள் என மொத்தம் 2,188 மாணவர்கள், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ. 10 ஆயிரம் பெறத் தகுதி செய்யப்பட்டனர்.
* புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் படி, இந்திய அளவில் ஆண்டுதோறும் 10 லட்சம் புதுமையான யோசனைகள் சேகரிக்கப்படுகின்றன.
