வங்கதேசத்தில் தாக்குதல் நீடிப்பு மேலும் ஒரு இந்து சுட்டுக் கொலை

புதுடெல்லி; வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் சுட்டுக்கொல்லப்பட்டது பதற்றத்தை அதிகரித்து உள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது.

முதலாவதாக மைமன்சிங்கில் இந்து இளைஞரான தீபு சந்திர தாஸை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. இதனை தொடர்ந்து இரண்டாவதாக ராஜ்பாரியின் பாங்ஷா மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் அன்று இந்து இளைஞரான அம்ரித் மொண்டல் கொல்லப்பட்டார். ஆனால், மொண்டலின் கொலை மத ரீதியான தாக்குதல் அல்ல, மாறாக மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்று காவல் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த கொலைகள் தொடர்பாக இதுவரை 12 பேரைக் கைது செய்துள்ளனர்.

தற்போது வங்கதேசத்தில் மற்றொரு இந்துவான பஜேந்திர பிஸ்வாஸ் என்பவர் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை எழுப்பியுள்ளது. வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆடைத் தொழிற்சாலையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரிந்த ஓர் இந்து ஊழியர் பஜேந்திர பிஸ்வாஸ் (42), சக ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில், பலுகா உபஜிலா பகுதியில் அமைந்துள்ள லபிப் குழுமத்திற்குச் சொந்தமான சுல்தானா ஸ்வெட்டர்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் நடந்தது. இந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட நோமான் மியா (29) என்பவரும் அதே பிரிவில் பணிபுரிந்து வந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் நாட்டில் பதிவான மூன்றாவது இந்துவின் கொலை இதுவாகும்.

* இந்தியாவிலிருந்து தூதரை திரும்ப அழைத்த வங்கதேசம்
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ராஜதந்திர உறவு மோசமடைந்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள தனது தூதரை வங்கதேச அரசு அவசரமாக நேரில் அழைத்துள்ளது. தற்போதையின் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவில் உள்ள தனது தூதர் எம்.ரியாஸ் ஹமிதுல்லாவை உடனடியாக நாடு திரும்புமாறு ‘அவசர அழைப்பு’ விடுத்தது.

இந்த உத்தரவை ஏற்று அவர் திங்கட்கிழமை இரவு டாக்கா சென்றடைந்தார். நேற்று வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகர் முகமது தௌஹித் ஹொசைன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலிலூர் ரஹ்மான் ஆகியோர் வெளியுறவு அமைச்சகத்தில் ஹமிதுல்லாவுடன்ஆலோசனை நடத்தினர்.

இதுபற்றி கேட்ட போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலிலூர் ரஹ்மான் கூறுகையில்,’ நாங்கள் அவ்வப்போது தூதரை அழைக்கிறோம். நாங்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம்’ என்றார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இரு நாடுகளும் சமீபத்தில் தங்கள் தூதர்களை அழைத்துள்ளன.

Related Stories: