புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்- சோனியா தம்பதியின் மகளும், மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியான எம்பி பிரியங்கா காந்தி – ராபர்ட் வத்ரா தம்பதிக்கு 24 வயது ரைஹான் வத்ரா என்ற மகனும், மிரய்யா என்ற மகளும் உள்ளனர். ரைஹான் வத்ரா புகைப்படக் கலைஞராகவும் விஷுவல் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது தாத்தா ராஜீவ் காந்தி மற்றும் மாமா ராகுல் காந்தி பயின்ற டேராடூன் டூன் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பையும் முடித்துள்ளார். இவரும் டெல்லியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான அவிவா பெய்க்கும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவிவா பெய்க் ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்தவர் என்பதோடு, தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனையாகவும் திகழ்கிறார்.
இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் ரைஹான் வத்ரா மற்றும் அவிவா பெய்க் ஆகியோருக்கு இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. அவீவா மூன்று நாட்களுக்கு முன்பு ரைஹானுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் பதிவேற்றியிருந்தார், அதை இப்போது மூன்று இதய ஈமோஜிகளுடன் ‘ஹைலை ட்ஸ்’ பிரிவில் வைத்துள்ளார். விரைவில் திருமணம் நடை பெற உள்ளது.
யார் இந்த அவிவா?
ரைஹான் காதலி அவிவாவின் தந்தை இம்ரான் டெல்லியின் தொழில் அதிபர். தாயான நந்திதா பெய்க் பிரபல டிசைனராக உள்ளார். அவீவா பெய்க், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் பயின்றார் ‘அட்லியர் 11’ என்ற புகைப்பட ஸ்டுடியோவின் இணை நிறுவனர் ஆவார். மேலும் அவிவாவின் தாயான நந்திதா பெய்க்கும் பிரியங்கா காந்தியும் நீண்டகால நண்பர்கள். இரு குடும்பத்தினரும் திருமண விழாவை தனிப்பட்ட முறையில் ராஜஸ்தானின் ரத்தம்போரில் நடத்த உள்ளனர்.
