திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், முன்னாள் தேவசம் போர்டு அதிகாரிகள், முன்னாள் உறுப்பினர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு உறுப்பினராக இருந்த விஜயகுமார் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே கடந்த பினராயி விஜயன் மந்திரிசபையில் தேவசம் போர்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான கடகம்பள்ளி சுரேந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததால் அவரையும் கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் கடந்த இரு வருடங்களாக தேவசம் போர்டு தலைவராக இருந்த பிரசாந்த் ஆகியோரிடம் கடந்த இரு தினங்களுக்கு முன் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.
வழக்கமாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்துத் தான் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இவர்கள் இருவரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்.பி. சசிதரன் தலைமையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சுமார் 2 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை நடந்ததை கடகம்பள்ளி சுரேந்திரன் உறுதி செய்துள்ளார். தங்கம் திருட்டு நடந்த 2019ம் ஆண்டு தேவசம் போர்டு அமைச்சராக இருந்ததால் சி தனக்குத் தெரிந்த அனைத்து விவரங்களையும் போலீசிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
* ராஜபாளையத்தில் விசாரணை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு தொடர்பாக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஜமீன்கொல்லங்கொண்டான் இந்திரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு டிஎஸ்பி சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர்.
அதன்பிறகு, சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருவனந்தபுரம் எஸ்ஐடி அலுவலகத்தில் ஆஜராகவும் அறிவுறுத்தி சென்றனர். அதன்படி கிருஷ்ணன், எஸ்ஐடி அலுவலகத்தில் ஆஜரானதாக தெரிகிறது.
