கலியுக வைகுண்டத்தில் ஏகாதசி விழா கோலாகலம் திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு

திருமலை: கலியுக வைகுண்டமாக விளங்கும் திருப்பதியில், வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலியுக வைகுண்டமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று அதிகாலை கோலாகலமாக தொடங்கியது. நள்ளிரவு நடை திறக்கப்பட்டு ஏழுமலையானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபராதனை நடைபெற்றது.

தொடர்ந்து அதிகாலை 1.40 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்து மூலவர் கருவறையை ஒட்டியுள்ள வைகுண்ட வாயில் (சொர்க்க வாசல்) திறக்கப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து ஒன்றிய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

இதைதொடர்ந்து ஆன்லைனில் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 32 உயரமுள்ள தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து மாட வீதியில் இழுத்து சென்றனர். அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட துவாதசியையொட்டி இன்று தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

எந்தவித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் மற்றும் தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் என மொத்தம் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செயற்கை நுண்ணறிவு மூலம் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கட்டுபாட்டு அறையில் இருந்தபடி தரிசனத்திற்கான கடைசி வரிசை வரை கண்காணிப்பு கேமராக்களில் கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு துல்லியமான காத்திருப்பு நேரம், பக்தர்களுக்கு அவ்வபோது காட்சிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

* 54 டன் மலர்கள், 10 டன் பழங்களால் அலங்காரம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி கோயில் உள்ளேயும் வெளியேயும் நேற்று சுமார் 8 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன் மேற்பார்வையில் நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட மலர்களை கொண்டு 10 நாட்களுக்கு மொத்தம் 50 டன் சம்பிரதாய மலர்களும், 10 டன் பழங்கள், 4 டன் ரோஜா மலர்கள், கொண்டு கொடி மரம் முதல் வைகுண்ட வாயில் என கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட உள்ளது.

Related Stories: