திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 27ம் தேதி இரவு சாத்தப்பட்டது. இந்நிலையில் மகரவிளக்கு கால பூஜைகள் நாளை முதல் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்குப் பின்னர் கோயில் நடை சாத்தப்பட்டது.
இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். வரும் 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், அன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. நடை திறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் முதலே தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று காலை 11.30 மணிக்குப் பின்னரே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். உடனடி முன்பதிவில் கட்டுப்பாடு: இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தரிசனத்திற்கு ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்படும். இன்று முதல் உடனடி முன்பதிவில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. தினமும் 2 ஆயிரம் பேருக்கு உடனடி முன்பதிவு பாஸ் வழங்கப்படும்.
