* பிராட்மேன் தொப்பி ஏலத்தில் விற்பனை
சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த பழம்பெரும் கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் மறைந்த, சர் டொனால்ட் பிராட்மேன், கடந்த 1947-48ம் ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆஸி அணிக்காக பங்கேற்று ஆடினார். அப்போது அவர் அணிந்திருந்த அடர் பச்சை நிறத்திலான பேக்கி கிரீன் தொப்பி, பின்னாளில் எஸ்.டபிள்யு.ஸோஹோனிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் அந்த தொப்பி, 70 ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது முதல் முறையாக ஏலம் விடப்பட உள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த தொப்பியை, கிரிக்கெட் ஆர்வலர்களும், பழம்பொருட்களில் நாட்டம் உள்ளவர்களும் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
* குஜராத் கேப்டன் ஆஸ்லே கார்ட்னர்
புதுடெல்லி: ஐபிஎல் போன்று, மகளிர் விளையாடும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) போட்டிகள், வரும் ஜனவரி 9ம் தேதி துவங்க உள்ளன. டபிள்யுபிஎல்லில் ஆடிவரும் அணிகளில் ஒன்றான குஜராத் ஜெயன்ட்ஸ் கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்லே கார்ட்னர் (28) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்காக, 3 சீசன்களில் ஆடியுள்ள ஆஸ்லே கார்ட்னர், 567 ரன்கள் குவித்துள்ளார்; 5 சதங்கள் விளாசி உள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 141.75. குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, ஜனவரி 10ம் தேதி, தனது முதல் போட்டியில் உபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக மோதுகிறது.
* உலக சாதனை படைக்க விராட் கோஹ்லி ரெடி
புதுடெல்லி: வரும் ஜனவரி 11ம் தேதி, இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடும் ஒரு நாள் போட்டித் தொடரின் முதல் போட்டி துவங்குகிறது. இத்தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 25 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 28000 ரன்களை நிறைவு செய்வார்.
இதுவரை வெறும் 623 இன்னிங்ஸ்களில் 27975 ரன்கள் விளாசியுள்ள கோஹ்லி, குறைந்த இன்னிங்ஸ்களில் 28000 ரன்களை எட்டிய வீரர் என்ற உலக சாதனையை படைப்பார். இந்த சாதனைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 644 இன்னிங்ஸ்களில் 28000 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இலங்கை வீரர் சங்கக்கரா, 666 போட்டிகளில் 28000 ரன்கள் பெற்றுள்ளார்.
