மகளிர் டி20 தரவரிசை ஆறாம் இடம் பிடித்து ஷபாலி வர்மா அபாரம்

துபாய்: ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில், இந்தியாவை சேர்ந்த இளம் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா மின்னலாய் பாய்ந்து 6ம் இடத்தை பிடித்துள்ளார். இலங்கை மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20யில், 34 பந்துகளில் 69 ரன் குவித்த அவர், 3வது போட்டியில் 42 பந்துகளில் 79, 4வது போட்டியில் 46 பந்துகளில் 79 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்தார்.

அட்டகாசமான அவரது ஆட்டத்தால், ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில், ஷபாலி வர்மா மின்னலாய் பாய்ந்து, 4 நிலைகள் உயர்ந்து 6ம் இடத்தை பிடித்துள்ளார். இப்பட்டியலில், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் 2, இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3, ஆஸியின் தஹ்லியா மெக்ராத் 4, தென் ஆப்ரிக்காவின் லாரா உல்வார்ட் 5ம் இடங்களில் மாற்றமின்றி தொடர்கின்றனர்.

அதேபோல், மகளிர் டி20 பந்து வீச்சு தரவரிசையில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில், இந்திய வீராங்கனை ரேணுகா சிங் தாக்குர் 8 நிலைகள் உயர்ந்து 7ம் இடத்தை பிடித்து வியக்க வைத்துள்ளார்.

Related Stories: