கெபேரா: எஸ்ஏ20 போட்டியில், குவின்டன் டி காக்கின் அதிரடி ஆட்டத்தால், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, 48 ரன் வித்தியாசத்தில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணியை வெற்றி வாகை சூடியது. தென் ஆப்ரிக்காவில் எஸ்ஏ20 டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. கெபேரா நகரில் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பிரிடோரியா கேபிடல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 2 ரன்னில் வீழ்ந்து ஏமாற்றம் தந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் குவின்டன் டி காக், புயலாய் மாறி ரன் வேட்டையாடினார். 47 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர் 5 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசினார். பின் வந்த மேத்யூ பிரீட்ஸ்கி 33 பந்துகளில் 52, ஜோர்டான் ஹெர்மான் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தனர்.
இவர்களின் அதிரடியால், சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதன் பின், 189 ரன் வெற்றி இலக்குடன் பிரிடோரியா களமிறங்கியது. துவக்க வீரர்களில் ஒருவரான பிரைஸ் பார்சன்ஸ் 1 ரன்னில் வீழ்ந்து அதிர்ச்சி தந்தார். மற்றொரு துவக்க வீரர் வில் ஸ்மீட் 35, பின் வந்த ஷாய் ஹோப் 36, ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் 25 ரன் எடுத்தனர்.
மற்ற வீரர்கள், சன்ரைசர்ஸ் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 18 ஓவர்களில் பிரிடோரியா 140 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதனால், சன்ரைசர்ஸ், 48 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை சுவைத்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் ஆடம் மில்னே 4 விக்கெட் வீழ்த்தினார்.
