அகமதாபாத்: தமிழ்நாடு அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விஜய் ஹசாரே கோப்பைக்காக, அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணியின் துவக்க வீரர்கள் ஆதிஷ் 14 ரன்னிலும், கேப்டன் நாராயண் ஜெகதீசன் 65 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் சிறப்பாக ஆடி, 64 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். பின் வந்தோரில் பாபா இந்திரஜித் 28, முகம்மது அலி 31, சாய் கிஷோர் 38 ரன்களுக்கு வீழ்ந்தனர். 49.5 ஒவரில் தமிழ்நாடு 288 ரன்னுக்கு ஆல்அவுட்டானது.
கர்நாடகா தரப்பில், அபிலாஷ் ஷெட்டி 4, வித்யாதர் பாட்டீல், ஷ்ரீசா ஆச்சார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதையடுத்து, 289 ரன் வெற்றி இலக்குடன் கர்நாடகா களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் 22 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீரரான கேப்டன் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி 58 ரன் குவித்து ஆட்டமிழந்தார். பின் வந்த வீரர்களில் ஷ்ரேயாஸ் கோபால் 55, கிருஷ்ணன் ஸ்ரீஜித் 77 ரன் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். 47.1 ஓவரில் கர்நாடகா 6 விக்கெட் இழந்து 293 ரன்கள் எடுத்தது. அதனால், 4 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி அபார வெற்றி பெற்றது. கிருஷ்ணன் ஸ்ரீஜித் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
