திருவனந்தபுரம்: இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நேற்று, இந்திய மகளிர் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்துள்ளது. சமாரி அத்தப்பட்டு தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 3 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இந்த அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி, திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய இந்திய துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 15.2 ஓவரில் இந்த இணை 162 ரன்களை வேட்டையாடிய நிலையில், முதல் விக்கெட்டாக ஷபாலி வர்மா 79 ரன்னில் (46 பந்து, 1 சிக்சர், 12 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து 17வது ஓவரில் மந்தனா 80 ரன்னில் (48 பந்து, 3 சிக்சர், 11 பவுண்டரி) மீபகேவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் வந்த ரிச்சா கோஷ் 16 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 10 பந்தில் 16 ரன் எடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்திருந்தது.
