இன்று 5வது மகளிர் டி20: இலங்கை ஒயிட்வாஷ்… இந்தியா காட்டுமா மாஸ்?

திருவனந்தபுரம்: இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள, சமாரி அத்தப்பட்டு தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி கெத்தாக வென்று நிமிர்ந்து நிற்கும் நிலையில், இன்று இரவு 7 மணிக்கு, கடைசி மற்றும் 5வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை, பேட்டிங், பந்துவீச்சு ஆகிய துறைகளில் இந்திய மகளிர் அசத்தலாக செயலாற்றி வருகின்றனர்.

குறிப்பாக, துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்கரிகஸ், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் என டாப் ஆர்டர் பேட்டிங் அட்டகாசமாக உள்ளது. பந்துவீச்சிலும் வைஷ்ணவி சர்மா, கிரந்தி கவுட், அருந்ததி ரெட்டி உள்ளிட்டோர் துல்லியமாக பந்துகளை வீசி பேட்டர்களை திணறடித்து வருகின்றனர். இருப்பினும் பீல்டிங்கில் சில சமயம் இந்திய வீராங்கனைகள் சொதப்பி வருவதை மறுக்க முடியாது. 4வது டி20 போட்டியில் இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான சமாரி அத்தப்பட்டு, ஹாசினி பெரேரா, இமேஷா துலானி சிறப்பான செயல்பட்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இருப்பினும், பின்வந்தோர் ரன் குவிப்பில் கோட்டை விட்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தவிர, இலங்கை அணியின் பந்து வீச்சு, இந்திய அணியின் மந்தனா, ஷபாலி வர்மா போன்ற திறமையான பேட்டர்கள் முன் எடுபடவே இல்லை. அதனால், அந்த போட்டியிலும் இலங்கை தோற்க நேரிட்டது. இந்நிலையில், இன்று நடக்கும் போட்டியிலாவது இலங்கை அணி வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இன்றைய போட்டியில் இலங்கையை வென்று ஒயிட்வாஷ் செய்ய இந்திய வீராங்கனைகள் தீவிரம் காட்டுவர். அதனால், இன்றைய போட்டி சுவாரசியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

* இரு அணி வீராங்கனைகள்
இந்தியா: ஹர்மன்பிரித் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி சர்மா, ஸ்நேஹ் ராணா, ஜெமிமா ரோட்ரிகஸ், ஷபாலி வர்மா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிரந்தி கவுட், ரேணுகா சிங், ரிச்சா கோஷ், கமாலினி, சரணி, வைஷ்ணவி சர்மா.

இலங்கை: சமாரி அத்தப்பட்டு (கேப்டன்), ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்சிதா சமரவிக்ரமா, நிலக்சிதா டி சில்வா, கவிஷா தில்ஹாரி, இமேஷா துலானி, கவுசினி நுத்யங்கனா, மால்ஷா ஷேஹானி, இனோகா ரணவீரா, ஷாஷினி கிமானி, நிமேஷா மதுஷானி, காவ்யா கவிந்தி, ராஷ்மிகா செவ்வந்தி, மால்கி மதாரா.

போட்டி நேரம்: இரவு 7 மணி

Related Stories: