உலக பிளிட்ஸ் செஸ் முதலிடம் பிடித்த அர்ஜுன் எரிகைசி

தோஹா: உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியின் முதல் நாளில், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். கத்தாரின் தோஹா நகரில் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. உலக ரேபிட் செஸ் போட்டியில் நார்வேயை சேர்ந்த உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.

அதைத் தொடர்ந்து தற்போது உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த முதல் நாள் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, மேக்னஸ் கார்ல்சன் மோதினர். இப்போட்டியில் அட்டகாசமாக ஆடிய எரிகைசி, சாதுரியமாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். போட்டியில் தோற்ற கார்ல்சன், மேசை மீது கையால் ஓங்கி தட்டி கோபத்துடன் சென்ற வீடியோ சமூக தளங்களில் வைரலாக பரவியது.

மற்றொரு பிளிட்ஸ் போட்டியில், எரிகைசி, உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவை வீழ்த்தினார். தவிர, மேலும் 3 போட்டிகளில் டிரா செய்தார். முதல் நாள் போட்டி முடிவில் எரிகைசி, 10 புள்ளிகள் பெற்று, பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் மேக்ஸிமே வஷியர் உடன் இணைந்து முதலிடம் பிடித்தார்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவின் பேபியானோ கரவுனா, சீனாவின் யு யாங்கி ஆகியோர் 8.5 புள்ளிகளுடன் உள்ளனர். மேக்னஸ் கார்ல்சன், அலிரெஸா ஃபிரோஸா உள்ளிட்ட 8 வீரர்கள் 3ம் இடத்தில் உள்ளனர். தமிழகத்தின் பிரக்ஞானந்தா, குகேஷ் உள்ளிட்ட 21 வீரர்கள் 7.5 புள்ளிகளுடன் 14வது இடத்தை பிடித்துள்ளனர்.

Related Stories: