அரிமளம், திருமயம் பகுதிகளில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

*கட்டுப்படுத்த வலியுறுத்தல்

திருமயம் : அரிமளம், திருமயம் குடியிருப்பு பகுதி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டூழியம் செய்யும் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கிராம மக்கள் விவசாயத்தோடு வீடுகள் தோறும் சிறு சிறு தோட்டங்கள் அமைத்து பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பல கிராமங்கள் அரிமளம் வனப்பகுதி அருகே உள்ளதால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளான குரங்கு, மான், மயில் உள்ளிட்டவைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து அழிவை ஏற்படுத்துவதாக புகார் எழுந்து வந்தது.

இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி விவசாயிகள் பலமுறை முறையிட்டும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த அரிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் நாளுக்கு நாள் குரங்குகள் எண்ணிக்கை அதிகரித்து விவசாய நிலங்கள் மட்டுமல்லாது வீட்டு தோட்டங்களுக்குள் புகுந்து பழ மரங்கள், காய்கறி தோட்டங்களை நாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் தைலம் மரங்கள் மட்டுமே நடப்பட்டுள்ளதால் வனப்பகுதியில் உள்ள குரங்கு, வனவிலங்குள், மயில் உணவு இன்றி உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு வனவிலங்குகள் அடிக்கடி இரையாவதும் வாடிக்கையாக வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வன விலங்குகள் காட்டை விட்டு வெளியே வராத அளவிற்கு வனப்பகுதியில் பழம் தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் நகர் பகுதியில் குரங்குகளை பிடிக்கும் நபர்கள் அதனை அரிமளம் வனப்பகுதிக்கு விட்டு விட்டு செல்வதால் நாளுக்கு நாள் குரங்கு எண்ணிக்கை அதிகரித்து அரிமளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதோடு வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் வருவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மருத்துவமனை, பள்ளிகளையும் விட்டு வைக்காத குரங்குகள்:

திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட பலர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவ வளாகத்தில் இருக்கும் போது அப்பகுதியில் திரியும் குரங்குகளால் மருத்துவமனைக்கு வரும் சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள் அச்சம் அடைகின்றனர்.

ஒரு சில குரங்குகள் குழந்தைகள் முதியோர், கர்ப்பிணி பெண்கள் வைத்திருக்கும் கை பைகளை பிடுங்கி மிரட்டுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளில், பள்ளி வளாகங்களில் மாணவர்கள் சிந்தும் உணவுப் பொருள்களை சாப்பிடுவதற்கு குரங்குகள் பள்ளி வளாகத்தில் சுற்றித் திரிவதால் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

Related Stories: