வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்குத் தமிழ்நாடு தொடர்ந்து துணை நிற்கும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

சென்னை: வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்குத் தமிழ்நாடு தொடர்ந்து துணை நிற்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று சிப்காட் உளுந்தூர்பேட்டையில் உள்ள பௌ சென் நிறுவனத்தின் வரவிருக்கும் ஹை குளோரி ஃபுட்வேர் ஆலையை நான் பார்வையிட்டேன். பௌசென் உலகின் மிகப்பெரிய பிராண்டட் காலணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது நைக் போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்கு காலணிகளை உற்பத்தி செய்கிறது.

உலகளாவிய வரி அழுத்தங்கள் மற்றும் நிச்சயமற்ற வர்த்தகச் சூழல்கள் இருந்தபோதிலும், அவர்கள் தமிழ்நாட்டின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர். வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்குத் தமிழ்நாடு தொடர்ந்து தோளோடு தோள் நின்று துணை நிற்கும். பௌ சென் நிறுவனம் தமிழ்நாட்டு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கள்ளக்குறிச்சியில் ரூ.2,302 கோடி முதலீடு செய்ய உள்ளது. இது 20,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் வேலைவாய்ப்புக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

2024 ஜனவரியில் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பெருமை எனக்குக் கிடைத்தது. இன்றைய இந்த வருகை, அவர்களின் தொலைநோக்குப் பார்வை செயல்வடிவம் பெறுவதைக் காண ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்த நிகழ்வில் நைக் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்களான உதய் சிங் மேத்தா மற்றும் சாமி வைகுண்டமன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட ஐந்து பேருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. நாம் கொண்டு வரும் ஒவ்வொரு முதலீடும் நமது மக்களுக்கு வேலைவாய்ப்புகளாக மாறுகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Related Stories: