*5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்
திருவண்ணாமலை, டிச.26: அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கியதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால், நீண்ட வரிசையில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் பவுர்ணமிக்கு இணையான எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்துக்காக வருகின்றனர். இந்நிலையில், அரசு விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கியிருப்பதால், குடும்பம் குடும்பமாக வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதோடு, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்களும் திருவண்ணாமலை திருக்கோயிலை தரிசனம் செய்ய பெருமளவில் குவிகின்றனர்.அதன்படி, நேற்று அதிகாலை முதல் இரவு 8.30 மணி வரை கோயிலில் கூட்டம் அலைமோதியது. எனவே, வழக்கம் போல நடை அடைப்பு இல்லாமல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் நிரம்பியதால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக தரிசன வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வழக்கம் போல, சிறப்பு முன்னுரிமை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் முடிந்ததும், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
அதேபோல், நேற்று இரவு கிரிவல பக்தர்கள் எண்ணிக்கையும் வழக்கத்தைவிட அதிகரித்திருந்தது. மேலும், இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கோயில் வாயிலில் நுழைந்து வெளியேறி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை வரும் 4ம் தேதி வரை உள்ளது. மேலும், புத்தாண்டு மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகியவையும் அமைந்துள்ளன. எனவே, இன்னும் 10 நாட்களுக்கு அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதையொட்டி, கோயில் நிர்வாகத்தின் சார்பில் விரிவான தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
