அரசு பணிகளில் இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விரைவில் நிறைவேறும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி

 

திருச்சி: திருச்சியில் நேற்று தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சங்கம் மற்றும் பராமரிப்பாளர்கள் சங்க 5வது மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியது: கலைஞர் வழியில், மாற்றுத்திறனாளிகள் துறையை தன் கையில் வைத்துக் கொண்டு முதல்வர் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கும் நிதியை விட, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 1850 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என ஒரு போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் முன்னெடுத்தார்கள். அதை நிறைவேற்றிக் கொடுத்தது நமது முதல்வர். 100 நாள் வேலை திட்டத்தில் பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக, அந்த திட்டத்துக்கான நிதி 60% ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யும் என்றும், 40 சதவீதம் மாநில அரசு ஒதுக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம்.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தான் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக உள்ளனர். அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையும் விரைவில் சீர் செய்யப்படும். இவ்வாறு, அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.இந்த மாநாட்டில், மாநில பொது செயலாளர் ஜான்சி ராணி, செயலாளர் வில்சன், பொருளாளர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: