காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் வரும் 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு

 

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் குறித்து வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் சித்ரா தெரிவித்துள்ளார். காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் சென்னை சிவானந்தா சாலையில் செவிலியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ‘தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து செவிலியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர். அங்கு, அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

இது தொடர்பாக 730 செவிலியர்களை போலீசார் கைது செய்து, ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். சென்னை போராட்டத்தில் பங்குபெற இயலாத செவிலியர்கள், அந்தந்த மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் காலியான செவிலியர் பணியிடங்கள் எத்தனை உள்ளது என்பதை வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க மருத்துவ கல்லூரி இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்ககம் மற்றும் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்ககம் ஆகிய இயக்கங்களுக்கு மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் சித்ரா கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: