மதுரை – ராமேஸ்வரம் ரயிலில் ஓசி பயணம் ‘ஜெய்ஹோ’ கோஷமிட்டு 300 வடமாநிலத்தவர் ‘எஸ்கேப்’: சிக்கிய 82 பேருக்கு ரூ.25,000 அபராதம்

ராமேஸ்வரம்: தமிழகத்தில் ராமேஸ்வரம் உட்பட புண்ணிய தலங்களுக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ரயிலில் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ரயில்களில் டிக்கெட் எடுக்காமலும், உட்கார இடம் கொடுக்காமல் இருக்கைகளில் பொருட்களை வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதனால் டிக்கெட் எடுத்து வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதுரையில் இருந்து தினமும் காலையில் ராமேஸ்வரத்துக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை 6.50 மணிக்கு ராமேஸ்வரம் புறப்பட்ட ரயிலில், டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் பணியில் இருந்தனர்.

ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகளின் டிக்கெட்களை பரிசோதனை செய்தனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்த பலரிடம் டிக்கெட் இல்லை. இதையடுத்து பரிசோதகர்கள் ராமேஸ்வரம் வரை ரயிலின் அனைத்து பெட்டிகளுக்கும் சென்று பரிசோதித்து, அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகள் – பரிசோதகர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பரபரப்புக்கிடையே காலை 10 மணிக்கு ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கு ரயில்வே போலீஸார் மற்றும் அதிகாரிகள் வடமாநில பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்த 400 பேர் அகில இந்திய பழங்குடி சங்கத்தின் சார்பில் ஆன்மிக சுற்றுலா வந்துள்ளது தெரிய வந்தது. அதில் ஒன்றாக ராமேஸ்வரம் வந்துள்ளனர். இந்த குழு உகாடி என்ற ஒருங்கிணைப்பாளர் மூலம் வந்துள்ளனர். இவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பயண செலவுக்கான பணத்தை பெற்றுக்கொண்டு, அனைவருக்கும் டிக்கெட் எடுக்காமல் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 82 பேருக்கு தலா ரூ.300 வீதம் ரூ.24,600 அபராதம் விதித்து டிக்கெட் பரிசோதகர்கள் வசூல் செய்தனர். மேலும் 300 பேர் சோதனை செய்ய அதிகாரிகள் முயற்சி செய்ததால், ரயில் நிலையத்தில் ‘ஜெய்ஹோ’ என கோஷமிட்டு கூச்சலில் ஈடுபட்டு மூட்டை முடிச்சுகளுடன் தப்பித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்கள் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மாலை ரயில் மூலம் திரும்பிச்செல்ல உள்ளனர்.

Related Stories: